குமுதம் பத்திரிகையில் வந்த செய்தி





ஸ்ரீ லலிதா யந்திர வடிவில் மந்திர ரூபிணி. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் தேவி ஸ்ரீ லலிதா. பராசக்தியான ஸ்ரீ லலிதா பிரம்மா, விஷ்ணு, சிவன், ருத்திரன், ஆகிய நால்வரை கால்களாகவும் சதாசிவனை பலகையாகவும் கொண்டு ஆசனத்தில் வீற்றிருப்பவள்.

ஸ்ரீ மாதா, பிரம்ம, விஷ்ணு சிவாத்மிகா உள்பட பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அம்பிகை விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி எனும் கிராமத்தில் அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை என்ற திருநாமத்தில் பீஜ மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பன்னிரண்டு கட்டங்களைக் கொண்ட கற்பலகையில் எந்திர வடிவம் கொண்டு வழிபடப்படுகிறார்.ண சங்ககால சிற்பியான மயன் காலத்திற்கு முன்னர் மூலங்களை அதாவது எழுத்துக்களையே தெய்வ சக்தியாக ரிஷிகளும் முனிவர்களும் வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. கற்பலகையில் சுவாமியை ஆவாகனம் செய்து பூஜை செய்யும் முறையைக் கொண்டு வந்தவர் ரிஷ்யசிருங்கர் என்றும் அவரால் முதன் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவர் பார்வதி லட்சுமி சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகளும் இணைந்த வடிவமாக எந்திர வடிவில் விளங்கும் இந்த லலிதையே என்கிறார்கள்.

ஆலய அமைப்பு மிக பழமையான சோழர்கால கட்டடக் கலையை நினைவூட்டுகிறது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் முகப்பை அலங்கரிக்கிறது .அதில் நுட்பமான கலை வடிவங்கள். பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்திகளாக சிவசக்தி ,விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய அம்பிகை வடிவங்களை காண்கிறோம்.இந்த முப்பெரும் சக்திகளில் ஒட்டுமொத்த வடிவமாக ஸ்ரீசக்ர பீடத்துடன் கூடிய விமானத்தின் கீழ் அமைந்துள்ள கருவறையில் அம்பிகை எழுந்தருளி இருக்கிறாள் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அட்சர வடிவிலான அம்பிகையை உணரமுடியாத பாமரர்களும் சிலா ரூபத்தில் கருவறையில் தனது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். லலிதா செல்வாம்பிகை சுமார் மூன்றடி உயர சிறிய சிலாரூபம் அழகும் பொலிவும் திருக்கோலம் கொண்டு, நெற்றியில் பளிச்சிடும் திலகம் சிரசில் சந்திரகலை தரித்திருக்கிறார். எட்டு கரங்கள் எட்டமுடியாது எட்டின் பெருமையையும் எட்டு எட்டாக பெருகும் ஆனந்தத்தையும் எட்டும்படி செய்பவள் என்று தேவியின் எட்டு கரங்களும் உணர்த்துவது போல தோன்றுகிறது.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அட்சமாலை ,கமண்டலம் செல்வநாயகி ஏந்தி இருக்கும் சங்கு, சக்கரம் உமையவள் பார்வதிக்குரிய பாசம் அங்குசம் ஆகியவற்றை ஆறு திருக்கரங்களில் அம்பிகை ஏந்தி இருக்கிறார்கள்.அபய வரத ஹஸ்தம் ஆக விளங்குகின்றன. ஆயுதங்களைத் தாங்கிய போதிலும் அளப்பரிய அமைதி முகத்தில் தெரிகிறது. தேவியின் திருமுகத்தில் நுண்கலைகளின் அடையாளமான சந்திரனைச் சூட்டியுள்ளார். இதன் மூலம் கலைகளின் அரசியாகவும் சூரியனை சூடிய தன் மூலம் அருட் பிரகாசத்தின் அடையாளமாகவும் விளங்குகிறாள். கமண்டலம் அட்சமாலை தாங்கியதால் ஞானத்தையும் கட்டுப்பாட்டையும் உணர்த்துகிறாள். சங்கு சக்கரத்தால் தர்மத்தையும் காலத்தையும் நினைவூட்டுகிறார். பாசத்தால் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு தன்மைகளும் ஏற்படுத்தும் வெவ்வேறு நிகழ்வுகள் என்று அறிவுறுத்துகிறாள். குண்டலினி சக்தியாக நாகமே குடைபிடிக்க ராஜ கம்பீரமாக வீற்றிருந்து உலகை இப்படி தன்னுடைய தோற்றத்தால் எல்லாம் என்னால் அருளப்பட்டவை என்று காட்டும் லலிதா செல்வாம்பிகை அம்மன் பாலாபிஷேகம் செய்யும் போது பச்சை நிற வடிவில் அருள்பாலிக்கிறார். அவ் ஆலயத்தில் அமர்ந்து தியானம் செய்தால் ஓம் என்ற பிரணவ மந்திரம் நம் காதுகளில் ஒலிக்கும். அம்மனின் வளையல் சத்தம், கொலுசு சத்தம் கேட்கும்.இதை பரிபூரணமாக உணர்ந்து இருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமத்தை இவ்வாலயத்தில் அமர்ந்து ஒரு முறை பாராயணம் செய்தாலே ஆயிரம் முறை பாராயணம் செய்த பலன் கிட்டுமாம். ஏனெனில லலிதை எனும் தேவிக்கான தனித்த பழமையான ஆலயம் இது என்பதுதான். இந்த அம்பிகைக்கு எல்லா பூக்களுமே விசேஷமானவை என்றாலும்கூட சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமைகளில் பூஜிப்பது சிறப்பு . வெண்ணிற மலர்களால் வெள்ளிக் கிழமைகளில் மாலைப்பொழுதில் அர்ச்சிப்பது விசேஷம். எல்லா நாட்களுமே பூஜைக்கு உகந்தவை தான் என்றாலும் இந்த நாட்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. லலிதா செல்வாம்பிகையின் உருவச் சிலைக்கு பின்னே 6 அடி உயரம் 2 அடி அகலம் 4 அங்குலம் கனம் கொண்ட கற்பலகையில் 12 கட்டங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு சதுர கட்டத்திலும் ஒவ்வொரு பீஜ மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சதுர கட்டங்களுக்கு மேல் நடுவே சூலமும் வலது பக்கத்தில் சூரியனும் இடது பக்கத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சூரியன் சந்திரன் உள்ளிட்ட கோள்களை அம்பாள் இயக்குகிறார் என்று இவ்வமைப்பின் மூலம் உணர்த்துகிறார் .உலக ரகசியங்கள் அனைத்தையும் அந்த 12 கட்டங்களில் விசேஷங்களாக எழுதியுள்ளார். ஆனால் அவை எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது சூட்சமம் . உருவ வழிபாடு ஏற்படும் முன்பு மந்திரத்திற்குரிய அட்சரங்களை பலகைகளில் எழுதி பூஜித்து வழிபட்டனர் நம் முன்னோர்.இப்போதும் தாமிரம் செம்பு உலோக தகடுகளில் எந்திரங்களை வரைந்து அட்சரங்களை அதில் பொரித்து பூஜைகளில் பயன்படுத்துகிறோம். சித்தர்கள் இலையில் சந்தனத்தால் எந்திரத்தை வரைந்து பூஜிப்பார்கள். அப்படி கற்பலகையில் இயந்திரம் அமைத்து வழிபட்டார் ரிஷியசிருங்கர். இவர்தான் குழந்தைப்பேறு வேண்டி தசரதன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி அதன் பலனாகத்தான் ராம அவதாரம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நெடுங்காலமாக முத்துமாரி அம்மன் என்ற பெயரில் கிராம தேவதை ஆகவே இந்த யந்திரவடிவ அம்மன் வழிபாட்டில் இருந்திருக்கிறது. அதன் பின்னரே இந்த அம்மன் லலிதா செல்வாம்பிகை என்ற பெயரில் உருவமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னணியில் சிலிர்க்க வைக்கும் தெய்வீக சம்பவம் ஒன்று இருக்கிறது.இந்த ஆலயம் சிதைந்து கிடந்த காலகட்டத்தில் இதை சீர் செய்து கும்பாபிஷேகம் நடத்திட எண்ணி அதற்கான முயற்சிகளில் ஊர் மக்களும் ஆன்மிக அன்பர்களும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்ச்சிக்கு தொடக்கத்திலேயே சோதனைகள் ஏற்பட்டன. அதனால் கேரளா சென்று பிரபல தேவபிரசன்ன ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரை அணுகி தேவ பிரசன்னம் பார்க்க ஆலயத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.அதனை ஏற்று அவர் ஆலயத்திற்கு வந்து உரிய பூஜைகள் செய்து முறைப்படி பிரசன்னம் பார்த்ததில் பல அபூர்வ தகவல்கள் கிடைத்தன. பிரசன்னத்தில் அமர்ந்து கிராமத்தை சுற்றியுள்ள எல்லை தெய்வங்களின் அமைப்பை கூறியவர், மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் யந்திர கல்லில் உள்ள எழுத்துக்கள் பிரபஞ்சத்திற்கு உரிய அடையாளம் கொண்ட பிரபஞ்ச பீஜாட்சர மந்திரம் என்றும் , இது ரிஷய சிங்கர் மகரிஷியால் எழுதப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளன எனவும் கூறினார். அப்போதுதான் இவ்வளவு காலமாக யந்திரக்கல் வடிவில் கிராம தேவதையாக அருள்பாலித்து நம்மை காத்தருளியது லலிதை வடிவம் என்பதும் அவ்வம்மனது மகிமையும் அனைவருக்கும் தெரியவந்தது .இக் கிராமத்தை சுற்றி அமைந்துள்ள விநாயகர், வேடியப்பன், வன துர்க்கை, பிடாரி அம்மன், சப்தகன்னியர், அய்யனார், சூலினி தேவி, அம்மச்சார் அம்மன், நாகதேவதை உள்ளிட்ட தேவைகளுக்கும் புதிய ஆலயம் எழுப்பப்பட்டு ஒரே ஆண்டில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர். கிராமத்தைச் சுற்றியுள்ள எட்டு ஆலயங்களும் ஓம் என்ற வடிவில் அமைந்து இருக்க நடுவே அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.

அதுவரை அருவமாக காட்சியளித்த அம்மனுக்கு கும்பாபிஷேகத்திற்கு பிறகு பஞ்சலோகத்தில் உருவ சிலை அமைத்து யந்திர கற்சிலைக்கு முன்பாக பிரதிஷ்டை செய்ய, அதன் பின்னர் அருவமும் உருவமும் கொண்ட அம்மன் அருளாசி புரிகிறார்.

எல்லா உயிர்களுக்கும் தாயாக திகழ்பவள் பராசக்தி. இத்தலத்தில் பரப்பிரம்ம சக்தியாகவே எழுந்தருளியிருக்கும் அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகையை உள்ளன்போடு ஒரு நொடி கைகூப்பி வழிபட்டு வந்தாலே இந்த உலகில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் கிட்டும் என்கிறார்கள்.

முப்பத்துமுக்கோடி தேவர்களும், சித்தர்களும் இந்த அம்மனை வழிபட்டு இருக்கிறார்கள்.அதன் காரணமாக ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் 18 விளக்குகள் தீபம் ஏற்றி 18 சித்தர்கள் எழுந்தருள அவர்களை ஆவாகனம் செய்து அம்மனுக்கு முன் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மகாமண்டபத்தில் பலிபீடம் சிம்மவாகனம் அமைந்திருக்கிறது. ரிஷ்ய சிருங்கர், மாரியம்மன் உற்ச்சவர் விற்றிருக்கிறார்கள். இந்த ஆலயத்தில் பவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஆலய கும்பாபிஷேக தினம் உள்ளிட்ட பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி உற்சவம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி நாட்களில் தச மஹாவித்யாவின் ஒட்டு மொத்த வடிவமான இந்த அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு. உத்திராட தினத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது ,உத்திராட நாளில் அம்மனை வழிபடுவது நல்ல பலனை தரும். புத்திர பாக்கியம் கிடைக்கும் .திருமணம் கைகூடும். பௌர்ணமி நாளிலும் வழிபடலாம். நோய் நீங்க விசேஷ நாட்களில் வழிபடுவோர் பலர். விஷேசநாட்களில் இங்கே நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு 12 நெய் தீபங்களை ஏற்றி அம்மனை பணிந்து 12 முறை வலம் வருவதால் 16 வகை பேறுகளும் கிட்டும் .தோஷங்கள் யாவும் நீங்கும் என்கிறார்கள்.

ஆதிசங்கரர் மதுரையில் இருந்து காஞ்சிபுரம் சென்றபோது இத்தலத்தில் ஓர் இரவு தங்கி யந்திர வடிவில் இருந்த இந்த அம்மனை வழிபட்டு சென்றிருக்கிறார் என்பது செவிவழிச் செய்தி.அபூர்வமான, அதிசயமான ,அமோகமான பலன்களை வழங்கும் இந்த லலிதா செல்வாம்பிகையை நீங்கள் எப்போது தரிசிக்க போகிறீர்கள்?.


சுபம்!.

மற்ற இணையதள ஆதரவாளர்கள்

அருள்மிகு அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் திருக்கோயில்
நம் ஆலய செய்தி
 
அருள்மிகு அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் திருக்கோயில்
நம் ஆலய செய்தி
 
அருள்மிகு அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் திருக்கோயில்
நம் ஆலய செய்தி
 
அருள்மிகு அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் திருக்கோயில்
நம் ஆலய செய்தி
 
அருள்மிகு அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் திருக்கோயில்
நம் ஆலய செய்தி